Sunday, December 22, 2024
Top News

தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலையில் இந்தியாவின் முதல் – பிரமாண்ட  மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம்

மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

– 25.3 மெகாவாட் டிசி / 22 மெகாவாட் ஏசி மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டமானது ஸ்பிக்கின் பசுமைசமூக மற்றும் நிர்வாக திறன் சார்ந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான தொழில்நுட்பத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்

– மிதக்கும் சூரிய மின் உற்பத்தி திட்டம் பாரம்பரியமாக நிலத்தில் அமைக்கும் சூரிய மின் உற்பத்தி ஆலைகளை விட அதிக மின் உற்பத்தியை வழங்குகிறது மற்றும் விலைமதிப்பில்லாத தண்ணீரை ஆவியாகாமல் சேமிக்க உதவுகிறது

– இந்த திட்டத்தை ஸ்பிக் நிறுவனம் சூரிய மின் உற்பத்தி துறையில் வடிவமைப்புபொறியியல் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக திகழும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செயில் அன்ட் டெர்ரே நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துகிறது

சென்னை, மார்ச் 7- 2022:மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலையை பார்வையிட்டு அங்கு இந்தியாவின் முதல் மற்றும் பிரமாண்ட மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார். ஸ்பிக் நிறுவனம் இந்தியாவில் வேளாண் ஊட்டசத்து மற்றும் உரங்கள் உற்பத்தியில் முன்னோடி நிறுவனமாக விளங்கி வருகிறது. இது சிங்கப்பூர், ஏஎம் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமாகும்.   

அதிநவீன 25.3 மெகாவாட் டிசி / 22 மெகாவாட் ஏசி, மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையமானது தொழிற்சாலைகளில் நிலையான அடிப்படையில் மின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான ஏஎம் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஒரு முன்னோடி முயற்சியாகும். இத்திட்டமானது ஸ்பிக்கின் பசுமை, சமூக மற்றும் நிர்வாக திறன் சார்ந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான தொழில்நுட்பத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்

ஸ்பிக் நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை பாராட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத தூய்மையான மின்சார உற்பத்திக்கான தேவை என்பது காலத்தின் கட்டாயமாகும். மேலும் தமிழகம் தற்போது 15,500 மெகாவாட்டிற்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. தமிழக அரசு சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மாநிலத்தில் தற்போதுள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் இதுபோன்ற வசதியை ஏற்படுத்துவது என்பது புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி மற்றும் தண்ணீரை சேமிப்பதற்கு வழிவகுக்கும். அத்துடன் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்குப் பயன்படுத்தப்படும் நிலங்களின் பயன்பாடும் வெகுவாக குறையும். ஸ்பிக்கின் இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டமானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைப் பயன்படுத்தி மாநிலத்தில் உள்ள தொழில்கள் வளர்ச்சிக்கான ஒரு முன்னோடி திட்டமாகும் என்று தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத் திறப்பு விழாவில் பேசிய ஸ்பிக் நிறுவனத் தலைவரும் ஏஎம் இன்டர்நேஷனல் குழும நிறுவனத் தலைவருமான அஸ்வின் முத்தையா கூறுகையில், சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டத்தைத் துவக்கி வைத்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்பிக் நிறுவனம் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான புதுமையான திட்டங்களின் மூலம் பசுமை ஆற்றலை திறம்பட பயன்படுத்துவதில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. தூய்மையான எரிசக்தியை நோக்கிய இந்தியா மற்றும் தமிழகத்தின் பயணத்தில் நாங்கள் முன்னோடியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி முன்னேறுவதற்கான நமது சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக உறுதிப்பாட்டிற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஸ்பிக்கின் இந்த அதிநவீன திட்டமானது சூரிய மின் உற்பத்தியால் உருவாக்கப்பட்ட ஆற்றல் மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது. இந்த திட்டமானது புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்துவதற்கான ஒரு முன் முயற்சியாக இருக்கும். எங்களின் முயற்சிகளை தமிழக அரசு அங்கீகரித்து பாராட்டியதற்காக ஸ்பிக் குழுமம் பெருமை கொள்கிறது என்று தெரிவித்தார்.

மாண்புமிகு முதல்வரை ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குனர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். முதல்வருக்கு நிறுவனத்தின் சார்பில் தலைமை நிதி அதிகாரி கே.ஆர். ஆனந்தன் நினைவு பரிசு வழங்கினார்.

தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பெரிய நீர் தேக்கத்தில் நிறுவப்பட்டுள்ள, மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் ஆண்டுக்கு 42.0 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரமும் ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உரங்களின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கான செலவு 150.4 கோடி ரூபாய் ஆகும்.

இந்த சூரிய மின் உற்பத்தி நிலையமானது ஏஎம் இன்டநேஷனல் நிறுவனத்தின் முழு சொந்த துணை நிறுவனமான கிரீன்ஏஎம் எனர்ஜி நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இந்த சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கான வடிவமைப்பு மற்றும் பொறியியல் தொழில்நுட்பத்தை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி வல்லுனரும் உலகின் முன்னணி நிறுவனமுமான  செயில் அன்ட் டெர்ரே நிறுவனத்துடன் இணைந்து ஸ்பிக் நிறுவனம் செயல்படுத்துகிறது. இதற்கான கட்டுமான திட்டங்களை ஏஎம் இன்டர்நேஷனல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான ஈடாக் என்ஜினியரிங் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. மேலும், இந்த மின் உற்பத்தி ஆலையில் பயன்படுத்தப்படும் புதிய தலைமுறை மோனோ பெர்க் பிவி பேனல்கள் 1500 வோல்ட் மூலம் 390 வாட்-பீக்கை உருவாக்க முடியும். மேலும், ஆலையின் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும், நஷ்டத்தை குறைக்கவும் 3.25 மெகாவாட் திறன் கொண்ட மேம்பட்ட உயர் திறன் இன்வெர்ட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். ஏனெனில் நீரின் குளிர்ச்சி காரணமாக அதிக அளவில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.  இதன் மூலம் தூய்மையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதோடு, நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் ஆவியாகாமல் 60 சதவீதம் கட்டுப்படுத்தப்படுவதன் மூலம் இத்திட்டம் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்தத் திட்டம் இந்திய சூரிய மின் உற்பத்தி மேம்பாட்டுத் துறையில் ஒரு முக்கியமான சாதனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது